திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடக்கம்.!
சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்று முதல்வர் தெரிவித்த நிலையில், தற்போது கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதனை தடுக்கும் வகையில் சந்தை மூடப்பட்டது. இதனால், சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.
சென்னை கோயம்பேடு சந்தை மூடப்பட்டதின் விளைவாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறி வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே மொத்த வியாபாரிகளிடம் இருந்த சரக்குகளே விற்பனை ஆனது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்த்தி விற்கப்பட்ட நிலையில், சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது.
இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாரிகளில் 6 ஆயிரம் டன் காய்கறிகளுடன் வந்துள்ளன. மேலும் இந்த சந்தையில் 4 பிரிவுகளாக கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஏ பிரிவில் 58 கடைகள், பி பிரிவில் 31 கடைகள், சி பிரிவில் 60 கடைகள், டி பிரிவில் 51 கடைகள் என விற்பனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.