பரபரப்பை ஏற்படுத்திய கல்வெட்டு ! தேர்தல் முடிவுகளுக்கு முன்பே எம்.பி.யான துணை முதலமைச்சர் மகன்
ரவீந்திரநாத் குமாரின் பெயரில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டு பதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது.இதில் 6-கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது.7-ஆம் கட்ட தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.வருகின்ற 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுகிறது.
எனவே மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேனியில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் போட்டியிடுகிறார்.
காசி ஸ்ரீ அன்னபூரணி கோயில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் என்ற ஊரில் உள்ளது.அந்த கோவிலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நன்கொடை வழங்கியதால்,கல்வெட்டில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெயர் மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் பெயர் இடம்பெற்றது.
ஆனால் அந்த கல்வெட்டில் வாக்குப்பதிவு கூட நிறைவடையாத நிலையில் ரவீந்திரநாத் குமாரின் பெயரில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று பதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.