மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருங்கள் முதல்வர்
நிவர் புயல் காரணமாக புயலும் மழையுமாக இருப்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ள நிலையில், புதன்கிழமை புயல் காரைக்கால் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் குறித்துப் பல்வேறு மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் புதன்கிழமை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எனது தலைமையில் கடந்த 23 ஆம் தேதி ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது எனவும், ஏற்கனவே 18ஆம் தேதி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், 12ஆம் தேதி எனது தலைமையிலும், 21ஆம் தேதி மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையிலும் விரிவான ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றதாகவும் பேரிடர் காலங்களில் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கவும் 36 மாவட்டங்களுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 24ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கன மழையும் 25ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை உடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இதனை எதிர் கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிவித்துள்ளார். மேலும் புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கக் கூடிய மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தனது அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 24ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெரும் மழையும், புயலும் இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #CycloneNivar pic.twitter.com/Cb6hQdZKs5
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 24, 2020