இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள் – பேரிடர் மேலாண்மை ஆணையர்
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக்தில் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை விடுத்துள்ளார். பேரிடர் காலங்களில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வியூகங்கள் வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது அவசியம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் இன்று மாலை ஆம்பன் புயல் உருவாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய மாவட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.