மதுக்கடைகளையும், பார்களையும் மூட வேண்டும்..! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
மதுக்கடைகளையும், பார்களையும் மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும் என்றும் மதுக்கடைகளையும், பார்களையும் மூட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுவுக்கு எதிராக மக்களின் கோபம்:
அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில், “சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர். மதுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு கோபம் உள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இது” என்று பதிவிட்டுள்ளார்.
பெண்களின் உணர்வு மதிக்கத்தக்கது:
மேலும், அப்பகுதி பெண்கள் கடைபிடித்த வழிமுறை வேண்டுமானால் சரியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மதுவுக்கு எதிரான அவர்களின் உணர்வு மதிக்கத்தக்கது. அவர்களின் போராட்ட உணர்வை நான் பாராட்டுகிறேன் என்று கூறிய அவர் அப்பகுதியில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
பெண்கள் போராட்டம்:
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மதுக்கடை மற்றும் குடிப்பகத்தால் அங்கு மது குடிப்பவர்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி விழுந்து கிடப்பதும் அப்பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவ, மாணவியரிடம் தவறாக நடப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
முழு மதுவிலக்கு நடைமுறை:
எனவே, மதுவுக்கு எதிரான மக்களின் இந்த கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு சிக்கலாக மாறாமல் இருக்க, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடை மற்றும் குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும் எனவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்; மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும்!!
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 15, 2023