தமிழகத்தில் வங்கி சேவை தொடரும் – தமிழக வங்கி குழுமம் அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வங்கி சேவை தொடரும் என தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றானது தீவிரமடைந்ததால்,அதனைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருந்தது.எனினும்,கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரிப்பதால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக,மளிகை,காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும்,குறிப்பிட்ட அவசர தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,”இன்று முதல் மே 31-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்படும். ஆனால்,வங்கி கிளை ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும்.
நிர்வாக, கோட்ட, மண்டல அலுவலகங்கள் வழக்கமான பணி நேரங்களில் பணியாற்றவேண்டும்.மேலும்,வங்கிகள் தொடர்ந்து சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை கொண்டு இயங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல்,பணம் எடுத்தல், பணம் செலுத்துதல்,என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பணம் அனுப்புதல்,அரசு தொடர்பான வர்த்தகம் போன்ற அத்தியாவசிய அடிப்படை சேவைகளை வங்கி கிளைகள் வழங்கவேண்டும்.
ஏ.டி.எம். இயந்திரம் உள்பட பண சுழற்சி சேவைகள் அனைத்து நேரங்களிலும் முழுமையாக இயங்குவதை வங்கிகள் உறுதி செய்யவேண்டும்.
மேலும் முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கொரோனா தடுப்பபு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்”, என்றும் தெரிவித்துள்ளனர்.