தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடருகிறது..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
புகையிலை பொருட்கள் விற்க தடை:
தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பதற்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. பின்னர், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்ட்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையிட்டார்.
புதிய அரசாணை :
மேலும், கடந்த மாதம் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து குட்கா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து, இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசாணையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவித்துள்ளதோடு, குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு புதிய அரசாணை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர் பேட்டி:
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புகையிலைப் பொருட்கள் மீதான தடையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடருவதாகவும், இந்த தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.