விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டி! அண்ணாமலை அறிவிப்பு!!

annamalai Pattali Makkal Katchi

விக்கிரவாண்டி : சட்டப்பேரவைத் தொகுதியில் உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் வரும் ஜூலை மாதம் 10-ஆம் தேதி  விக்கிரவாண்டி தொகுதியில்  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.

இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை அறிவித்துள்ளார். 

முன்னதாக இந்த இடை தேர்தலில் போட்டியிடுவது பற்றி பா.ம.க திட்டமிட்டு வந்த நிலையில், இன்று திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி, குழு தலைவர் ஜி.கே.மணி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

அதனை தொடர்ந்து, கூட்டம் முடிந்த பின் பேசிய அன்புமணி கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றி எங்களுடைய முடிவை அறிவிப்போம் என கூறியிருந்தார். இதனையடுத்து, பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். 

அறிக்கையில் “தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்