டிடிஎப் வாசனுக்கு ‘நிபந்தனை’ ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி யூ-டியூப் பிரபலம் டிடிஎப் வாசன் , காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும் போது முன் சக்கரத்தை தூக்கி விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது கை முறிவு ஏற்பட்டது. வாகனம் சேதமடைந்தது.
இந்த விபத்து தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருந்தனர். பின்னர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு டிடிஎப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை எதிர்த்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு டிடிஎப் வாசன் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. காவல்துறை சார்பில், டிடிஎப் வாசன் விலையுயர்ந்த பைக், அதற்கான உடைகள் அணிந்து விபத்தில் சிக்கியதால் தற்போது நலமுடன் உள்ளார். ஆனால் அவரை பாலோ செய்யும் இளைஞர்கள் சிலர் தவறான பாதைக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது என ஜாமீன் வழங்க மறுத்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தார் டிடிஎப் வாசன். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், தான் 40 நாட்களாக சிறையில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎப் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை அடுத்து டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தினமும் டிடிஎப் வாசன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 3 வாரம் கையெழுத்திட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.