இன்று அதிகாலை புத்தமத வழக்கப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்.! 

Bahujan Samaj Party State Leader Armstrong

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது பொத்தூரில் இன்று அதிகாலை 1 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதி தரவேண்டும் என முன்னதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்து இருந்தார். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை  நேற்று நீதிபதி பவானி சுப்பராயன் விசாரணை மேற்கொண்டு, கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் அடக்கம் செய்துகொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் , வேண்டுமென்றால் கட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அனுமதி பெற்று நினைவிடம் அமைத்துக்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார் .

இதனை அடுத்து செம்பியம், பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உடலானது நேற்று மாலை 4.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. சுமார் 20 கிமீ தூரம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பின்னர் இன்று (ஜூலை 8) அதிகாலை 1 மணியளவில் பொத்தூரில்  உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடலானது புத்தமத முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்