பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!
பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள செம்பியம் பகுதியில் சடையப்பன் தெருவில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நின்று கொண்டிருந்துள்ளார் . மேலும் அவருடன் 2 நபர்கள் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சரியாக இரவு 7.30 மணியளவில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால், கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டு காயம் ஏற்பட்டது.
மேலும், தடுக்க முயன்ற அருகில் இருந்த 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழாதிருக்க மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அரிவாள் வெட்டு வாங்கிய இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது,
உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேசிய கட்சியின் மாநிலத்தலைவர் படுகொலை செய்யப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.