தவெக கொடியில் யானை சின்னம் – பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு
சென்னை : நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள கட்சி கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
நடிகரும், அரசியல்வாதியுமான விஜய், தமிழக வெற்றிக் கழகக் கட்சி தொடங்கியதிலிருந்து தமிழக அரசியலில் ஓர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம். இதனை பலர் வரவேற்றாலும், சிலர் குறிப்பிட்ட கருத்துக்களோடு எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கொடியின் பாடலை அறிமுகப்படுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை, விஜய் முறைகேடாக தனது கட்சி கொடியில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் இருந்து சண்டையிடும் யானைகளின் உருவத்தை நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) கட்சிக்கொடி வெளியான சமயத்திலேயே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு, பகுஜன் சமாஜ் கட்சி வேண்டிக்கொள் விடுத்தும், அதற்கு தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அக்கட்சி மனு அளித்துள்ளது. அதில், ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் சின்னத்தை அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் தவெக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், யானை சின்னத்தை அகற்ற வலியுறுத்தியும், விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த பிரச்சனை எங்கு போய் முடிய போகிறது என்று தெரியவில்லை. விரைவில் கொடிக்கான விளக்கத்தை தவெக கட்சி அளிக்கும் என்றும், இந்த பிரச்சனைக்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் சமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.