“கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது;ஆதீனத்தின் மேல் கை வைத்து பாருங்கள்” – அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,”சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை. ஆனால்,திருக்கோயில் சொத்துக்களில் மட்டும் தலையிடுகின்றனர். இதனால்,அறநிலையத்துறை கொள்ளையடிக்கும் கூடாரமாக திருக்கோயில் மாறி வருகிறது.எனவே,அறநிலையத்துறை எனக் கூறப்படும் அறமில்லாத துறையை கலைத்துவிட்டு ஒரு நீதிபதி, வழக்கறிஞரை போட வேண்டும்.மேலும்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம்,பொருள்கள் போடக்கூடாது.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்:”மதுரை ஆதீனம் தொடர்பான விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.நாங்கள் முதல்வரின் வழிகாட்டுதலோடு அடக்கி வாசித்து கொண்டிருக்கிறோம்.நாங்கள் எகிறி எகிறி அடிக்க முடியும்.அது நன்றாக இருக்காது என்பதற்காகத்தான் பின்னால் வருகிறோம்.எங்கள் பதுங்களை பயமாக அவர் கருதக் கூடாது.எங்களுக்கும் பாயத் தெரியும்.மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதியைப் போல பேசிக் கொண்டிருப்பதை அறநிலையத்துறை அனுமதிக்காது.எனவே,அவர் இவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொண்டால் அனைவரும் நல்ல சுமூகமான நிலையில் செல்வோம்.மாறாக,தொடர்ந்து மதுரை ஆதீனம் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பதில் சொல்வதற்கு ஏராளமானவை இருக்கிறது என்று அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் கூறினார்.
இந்நிலையில்,அமைச்சரே ஆதீனத்தின் மேல் நீங்கள் கையை வைத்து மட்டும் பாருங்கள் எனவும்,அமைச்சர் சேகர்பாபுவுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக,பாஜகவின் 8 ஆண்டு கால சாதனையை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கூறியதாவது:”இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மீண்டும் காவி வேட்டியை கட்ட தொடங்கியுள்ளார்.அவருடைய ஒரே வேலை என்னவென்றால்,ஒவ்வொரு இடத்திற்கும் சென்று சன்னியாசிகளை மிரட்டுவதுதான்.அந்த வகையில்,கடைசியாக மதுரை ஆதீனத்தை மிரட்டியுள்ளார்.அதாவது,”ஆதீனம் அவர்களே பார்த்து பேசுங்கள்,பழைய சேகர்பாபுவை காண்பித்தால் பிரச்சனை ஆகிவிடும்”,என்று மிரட்டுகிறார்.ஆனால்,பழைய சேகர்பாபுவை காட்டுவதற்காகத்தான் மோடி அரசு காத்துக் கொண்டிருக்கிறது.
அமைச்சரே ஆதீனத்தின் மேல் நீங்கள் கையை வைத்து மட்டும் பாருங்கள்.மோடி சென்னை வந்தபோது ஆதீனத்தை கூப்பீட்டு சென்னை ஏர்போர்டில் பத்து நிமிடம் வேலையில்லாமல் பேசிவிட்டு செல்கிறார்.அந்த புகைப்படத்தை பார்த்து விட்டாவது சேகர்பாபு அவர்கள் உசாராகி இருக்க வேண்டும்.அதைப் பார்த்து உசாராகவில்லை என்றால் கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.எனவே,ஆதீனத்தை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்;இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்”, என்று கூறியுள்ளார்.