B.E சேர்க்கை.. வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.! வெளியான புதிய அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, கடந்த ஜூன் 22இல் 1,76,744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது . மொத்தம் உள்ள 1.57 லட்சம் இடங்களில் இதுவரை 1,06,641 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்கள், முதற்கட்ட பொதுக் கலந்தாய்வின் மூலம் 16,064 மாணவர்கள் 2ஆம் சுற்று கலந்தாய்வில் 40,741 இடங்கள், 3ஆம் கட்ட கலந்தாய்வில் 37,508 மாணவர்கள், மேலும், 7,424 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் 2,959 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர மீதம் உள்ள 50,737 இடங்களை நிரப்ப கலந்தாய்வு தொடங்க உள்ளது. 12ஆம் வகுப்பு துணை தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள், பொது மற்றும் தொழிற்கல்வி மூலம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் நேற்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கோரப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு செப்டம்பர் 6 முதல் 8 முதல் இணையவழி கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் பட்டியலினத்தவர்கள், அருந்ததியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது .