B.E படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு..!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்காக, அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்ட 3 மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுமைக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க இம்மாதம் 30ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது..
இதுதொடர்பான வழக்கில், 3 மாவட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு இணையதள சேவை முடக்கப்பட்ட மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி,பொறியியல் படிப்புக்கு, ஜூன் 2ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய 42 இலவச சேவை மையங்கள், வருகிற ஜூன் 2ஆம் தேதி வரை செயல்படும் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்