ஆயுத பூஜை விடுமுறை – சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
இன்று முதல் அக்.13ம் தேதி வரை சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை : ஆயுதப்பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் 1,175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இன்று முதல் அக்.13ம் தேதி வரை சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி,கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றைய தினம் (09/10/2024 ) 225 பேருந்துகளும், நாளை (வியாழக்கிழமை) 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 35 பேருந்துகளும் நாளை (வியாழக்கிழமை) 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து இன்றும் நாளையும்110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
வருகின்ற ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இன்று 6,582 பயணிகளும் நாளை 22,236 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 21,311 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.