அருமை…தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் துபாஷ்!
தமிழக அரசின் 16-வது சட்டப்பேரவையில் இரண்டாவது நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து,மார்ச் 19 ஆம் தேதியன்று வேளாண் பட்ஜெட் தாக்கலும் நடைபெற்றது.இதனையடுத்து,நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக பெண் துபாஷ்:
இந்நிலையில்,தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக துபாஷ் பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில்,தற்போது முதல் முறையாக ராஜலட்சுமி என்ற பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இவர்:
ராஜலட்சுமி அவர்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த நிலையில்,தற்போது அவருக்கு வயது 60-ஐ எட்டியுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் பணியிலிருந்து ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு துபாஷ் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது,அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாஷ் பொறுப்பு:
‘துபாஷ்’ பொறுப்பில் இருப்பவர் சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சபாநாயகர் சட்டமன்றம் வரை செல்லும் போது முன்னே செல்வார்.அதன்பின்னர்,சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார்.இதனைத் தொடர்ந்து,மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது துபாஷ் பொறுப்பில் இருப்பவர் உடன் செல்வார்.
துபாஷ் பொறுப்பானது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து தொடரும் நிலையில்,தற்போது இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.