#Awareness: ‘சிறந்த கல்வி மாணவர்களின் உரிமை’ – நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ!

Default Image

பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளியீடு.

தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அண்மையில் சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்கடன் பள்ளியில் தொடங்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் சூர்யா பேசிய வீடியோவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசிய சூர்யா, சிறந்த பள்ளிகள் தான், சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பள்ளி என்பது வெறும் கட்டடம் அல்ல, அங்கு நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொறுப்புமிக்க கல்வியாளர்கள் என மூன்று தரப்பும் ஒன்றாக சேர்ந்தால் சிறந்த பள்ளிகளை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க முடியும். மகிழ்ச்சியான கல்வி சூழலை தரவேண்டியது அனைவரது பொறுப்பு. அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்துள்ளது தமிழக அரசு.

மாணவர்களின் எதிர்காலம் மீது அக்கறை உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல தரப்பினர் இந்த குழுவில் இருக்கிறார்கள். இந்த சிறந்த மாற்றத்தின் மூலமாக ஆக்கபூர்வமான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. பள்ளியை  சுற்றியுள்ள எல்லாம் பிள்ளைகளையும் படிக்கச் வைக்கிறதும், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கிறதும் பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியமான வேலை.

அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான சூழலும், வசதியும் இருக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள். பள்ளிக்கூடங்களுக்கான கட்டட வசதி, மதிய உணவு திட்டம், மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் வந்து சேருகிறதா என்பதையும் இக்குழு கவனிக்கும்.

நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி சூழலும், வசதியும் கிடைக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடக்கக்கூடிய பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பெற்றோர்கள் கலந்துகொள்வது மிக அவசியம். சிறந்த பள்ளியும், சிறந்த கல்வியும் மாணவர்களின் உரிமை, இதற்கு துணை நிற்கிறதும், உறுதி செய்கிறதும் நம் கடமை என தெரிவித்துள்ளார்.

surya

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்