Avadi : தொடரும் சோகம்… சென்னை அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தககி இருவர் பலி.!
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் பயன்படுத்தப்படுவதும், அதில் எதிர்பாராவிதமாக உயிரிழப்புகள் நேர்வதும் தொடர்கதையாகவே உள்ளது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள், அரசின் அறிவுரைகள் என தொடர்ந்தாலும் இந்த சம்பவம் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
இன்று சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எப் தொழிற்சாலை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஒப்பந்த தூய்மை பணியாளர்களான மோசஸ் (45 வயது), தேவன் (வயது 46) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கழிவுநீர் சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராவிதமாக விஷவாயு தாக்கியுள்ளது. இதில் இரு தொழிலாளர்களும் மயக்கமடைந்த உடன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்டனர்.
தொழிலாளர்களை மீட்டு அவர்களை ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும், 2 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.