“ஆட்டோ கட்டணம் உயர்வு – எந்த முடிவும் எடுக்கவில்லை” – போக்குவரத்துத் துறை விளக்கம்!
ஆட்டோ கட்டண உயர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : பிப்ரவரி ஒன்று முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது என்று ஒரு தகவல் வெளியானது. அதன்படி, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தரப்பில் முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்ததுள்ளதாகவும்,
இதனால், ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுலவர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.