மாணவர்கள் கவனத்திற்கு… 11,12- மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் இன்று முதல் விநியோகம்..!
11 மற்றும் 12 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் தனித் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், 11மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது தற்காலிக சான்றிதழை பயன்படுத்தி உயர் கல்விகளில் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.