பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்துக்கு.. இந்த நேரத்தில் எச்சரிக்கை மணி!
தேர்வு மையத்திற்கு காலை உணவு சாப்பிட்ட பின் வருகை புரிதல் வேண்டும் என பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வப்போது தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தேர்வும் எழுதும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக தேர்வு எழுதும் நாளன்று காலை 8 மணிக்கு, மாணவர்கள் தேர்வு மையத்திற்கு காலை உணவு சாப்பிட்ட பின் வருகை புரிதல் வேண்டும்.
இதுபோன்று காலை 9.45 மணிக்கு முதல் மணி, ஒரு முறை அடிக்கப்படும், அப்போது தேர்வர்கள் தேர்வறைக்கு வருகை புரிதல் வேண்டும். 10.15க்கு ஐந்தாவது மணி ஐந்து முறை அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம். 1.10க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும், அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.