திருமண விழாவில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது தான் திராவிட மாடலா? – வானதி சீனிவாசன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்திலும் நடிக்கிறார், வெளியிலையும் நடிக்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இல்லத் திருமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியல் குறித்த கருத்துக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு குடும்ப அரசியல் குறித்து பேசியுள்ளார். பிரதமர் கூறியது போல் திமுக என்பது ஒரு குடும்பம் தான். திமுகவினர் குடும்ப குடும்பமாக அரசியல் நடத்தி வருவது உண்மைதான். திமுகவினர் குடும்ப குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறோம்.
திமுக மாநாட்டிற்கு என்றாலும், போராட்டத்திற்கு என்றாலும் வருபவர்கள் அனைவர்ளும் குடும்பம் குடும்பமாக தான் வருவார்கள். தமிழ்நாடும், தமிழர்களும் கருணாநிதியின் குடும்பம்தான் என்றார். மேலும் கூறியதாவது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும், மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பொது சிவில் சட்டம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் பேச்சுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதில் கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வானதி சீனிவாசன், நான் அதிகமாக சினிமா பார்க்கமாட்டேன், அதனால் மாமன்னன் படத்தை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலையும் நடிக்கிறார் என்பது மட்டும் சொல்ல முடியும் என விமர்சித்துள்ளார்.
ஏனென்றால், அவர்கள் சொல்வதொன்று செய்வதொன்று என தெரிவித்தார். திருமண விழாவில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவதும், சாபம் விடுவதும் தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பிய அவர், நல்ல இடங்களுக்கு சென்று இதுமாதிரியான அரசியல் பேசுவது அநாகரீமாக செயலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார்.
அம்பேத்கர் வழங்கிய சட்டத்தின் ஒரு அங்கம் தான் பொது சிவில் சட்டம், பொது சிவில் சட்டம் அனைவருக்கும் என்பதற்கான கருத்தை மோடி வெளிப்படுத்தி உள்ளார் எனவும் கூறினார். மேலும், சிதம்பரம் கோயில் பிரச்னையை அரசு கவுரவ பிரச்சனையாக பார்க்கிறது. இந்து அறநிலையத்துறை அந்த கோயிலை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சில வேலைகளை செய்கிறார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமீழக அரசு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.