இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்கிற முயற்சியை கைவிட வேண்டும் – சசிகலா
இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்கிற முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி சசிகலா அறிக்கை!
இதுதொடர்பாக சசிகலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் கொண்டுவரப் போவதாக வரும் செய்திகள், மாநில உரிமைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தகூடும் என்று பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில், மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் இந்த புதிய முயற்சியை கைவிட்டு, ஏற்கனவே இருக்கின்ற நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.
இந்திய ஆட்சிப்பணிகளை தேர்வு செய்து அதற்காக கடின முயற்சி எடுத்து வெற்றி பெறும் பணியாளர்கள், தற்போதைய நடைமுறைகளை நன்றாக அறிந்து, அதனை ஏற்றுக்கொண்டு இந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், திடீரென்று தற்போது விதிகளை மாற்றம் செய்யும்போது அதனால் ஏற்படும் சாதக பாதகங்களை கட்டாயப்படுத்தி ஏற்று கொள்கிற மனநிலைக்கு தள்ளப்படுவதாக கருதுகிறார்கள்.
அதேபோன்று குடிமைப் பணியாளர்களாக இருப்பவர்கள், தான் பிறந்த மண்ணில், தனது சொந்த மாநிலத்தை மேம்படுத்திட வேண்டும் என்ற லட்சியங்களோடு இந்த துறையை தேர்வு செய்து பணியாற்றுவதில் அதிக விருப்பும் கொண்டிருப்பார்கள்.
மேலும், இந்த பணியில் தன்னை அர்பணித்துக்கொண்டவர்கள், தாங்கள் பணிபுரியும் மாநிலத்தில், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டு பணியாற்றுபவர்களை, திடீரென்று வேறு பணிகளுக்கு அவர்களை மாற்றம் செய்யும்போது, குறிப்பிட்ட அந்த பணிகளும் முடிவடையாமல் தடைபடுகின்ற நிலை ஏற்படகூடும். அது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தடையாக அமையலாம்.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்திய ஆட்சிப்பணி விதிகளை திருத்தம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மத்திய அரசினை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று மத்திய அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.