ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்…!
ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்.
தமிழகம் முழுவதுமுள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மிஷினில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சவுகத் அலி எனும் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது இந்த கொள்ளைக் கும்பலின் தலைவன் சவுகத் அலியையும் காவலில் எடுத்து விசாரிக்க பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். சவுகத் அளியிடமிருந்து ஏடிஎம் கொள்ளை குறித்த அதிகப்படியான தகவல்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கொள்ளை கும்பலுக்கு சவுகத் அலி மற்றும் சஹதப் கான் ஆகியோர் தலைவனாக இருந்ததாகவும், இவர்களுக்குக் கீழ் மற்ற கொள்ளையர்கள் செயல்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் கொள்ளை அடித்த பின்பதாக சவுகத் அலி உட்பட 5 கொள்ளையர்கள் சொந்த ஊருக்கு காரில் தப்பி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.