“வறட்சிக்கு முடிவுகட்டும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் ” : தொடங்கி வைத்தார் முதல்வர்.!
சென்னை : விவசாயிகளின் பல ஆண்டுகால கனவாக இருந்த ‘அத்திக்கடவு- அவினாசி’ திட்டத்தை சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்
கோவை, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை சென்னையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதால் கொங்கு விவசாயிகளின் கனவு நனைவாகி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளார் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்றால் என்ன?
அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்றால் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் பவானி ஆற்றின், பில்லூரிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வறட்சி பாதித்த பகுதிகளை பசுமையாக்கும் திட்டமாகும். இந்த திட்டம் கொங்கு மக்களின் பல ஆண்டுகால கனவு திட்டம் என்று கூறலாம்.
இந்த திட்டத்தின் மூலம் என்ன பயன்?
இன்று இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவை என 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் இருக்கும் 31 ஏரிகள் மற்றும் ஆயிரத்து 45 குளங்கல் ஆகியவற்றில் தண்ணீர் தேக்கிவைக்கப்படும். இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய பயன்பாட்டுக்கான கிணறுகள், ஆழ்த்துளைக்கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். அதைப்போல, குடி நீர் பிரச்சனைக்கும் அத்துடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர்த்தப்படும்.