ஜன.15-க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடக்கம்! – அமைச்சர் அறிவிப்பு
அத்திக்கடவு- அவினாசி திட்டம் வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என அமைச்சர் தகவல்.
தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்தோம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதனால், பவானி காலிங்கராயன் தடுப்பணையில் நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-க்குள் முடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
எனவே, அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் எனவும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார். இதனிடையே, திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கையாக இருப்பது அத்திக்கடவு – அவிநாசி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்கள்வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.