வெங்கடாசலபதி அலங்காரத்தில் தூத்துக்குடி பெருமாள் கோயில் மூலவர்.! நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்..,
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, முதலில் கோ பூஜையும், பின்னர் விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வெங்கடாசலபதி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் இன்று அதிகாலை முதலே வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.