ஒரே நேரத்தில் இரு முன்னாள் அமைச்சர்களின் இடங்களில் அதிரடி சோதனை… லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.!
ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதியானது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.