அதிமுக நோ., விஜய் தான் டார்கெட்? திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனம்! 

நேற்று நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக கூட்டணி கட்சிதலைவர்கள் தவெக தலைவர் விஜயை கடுமையாக தாக்கி பேசினர்.

TVK Vijay - Selvaperunthagai - Mutharasan - Karunas

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை விமர்சனம் செய்யும் மற்ற கட்சியினரை விமர்சனம் செய்தனர். குறிப்பாக பெரும்பாலானோர் பாஜகவை விமர்சனம் செய்ததோடு மட்டுமல்லாமல் விஜயையும் ‘டார்கெட்’ செய்தனர். ஆனால், பெரும்பாலானோர் அதிமுகவை வசைபாடவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ” அரசியல் களத்தில் நிறைய புற்றீசல்கள் வரும் போகும். ஆனால் அவை நிலைத்து நிற்காது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளருக்கு பஞ்சமே இல்ல. ஆசைப்படுவது தவறில்லை. ஒருவர் இருக்கிறார், அவர் துணை முதலமைச்சருக்குபழைய நண்பரா அல்லது இப்போதும் நண்பரா என்று தெரியவில்லை. (விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு) அவருக்கு செக்குக்கும், சிவலிங்கத்திற்குமே வித்தியாசம் தெரியவில்லை.

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் பாயாசம் என்கிறார். சின்னப் பிள்ளைகள் அப்படித்தான் பேசும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் ஹிட்லர் பற்றி படித்து பாசிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். ” என விஜயை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

கொங்கு ஈஸ்வரன் (கொங்கு மக்கள் கட்சி) :

கொங்கு மக்கள் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன் பேசுகையில், பிரசாந்த் கிஷோரை வைத்து தான் நாம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயித்தோமாம்.  அப்படி சிலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நாம் கடுமையாக உழைத்து தான் ஜெயித்தோம் என்பது நமக்கு தெரியும். பிரசாந்த் கிஷோரை திமுக மேடையிலோ, திமுக கூட்டணி மேடையிலோ பார்த்துளீர்களா? அரசியலுக்கும் அவருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் மட்டுமே. ” எனப் பேசினார்.

அண்மையில் தவெக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இறுதியாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலிலும், மேற்கு வங்க சட்ட தேர்தலிலும் வேலை செய்தேன் என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை குறிப்பிட்டு தான் கொங்கு ஈஸ்வரன் பேசியிருந்தார் என கூறப்படுகிறது.

கருணாஸ் :

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் பேசுகையில்,  ” பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது பேசி கொண்டிருக்கிறது.’ என விஜயை மறைமுகமாக கடுமையாக விமர்சித்து பேச தொடங்கினார்.

மேலும், ” பாதரசம் எதிலும் ஒட்டாது, மக்களிடமும் ஓட்டப்போவது இல்லை. பாதரசம் நஞ்சு, கொடியது. தங்கம், வெள்ளியை உருக்கும் உருகுலைக்கும். நாட்டை உருகுலைக்க பாசிசம் தான் இந்த பாயசத்தை உருவாக்குகிறது. அந்த பாசிசம் தான் இந்த பாதரசத்திற்கு பாதுகாப்பு. எத்தனை சவால்களை மத்திய அரசு தந்தாலும், தமிழ் மக்கள் மீது நம்பிக்கையோடு, பாசத்தோடு முதலமைச்சர் வழிநடத்தி செல்வார்.” என கருணாஸ் பேசினார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) :

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ” புதியதாக 2 ஆண்டுகளாக ஒரு அவதாரம் தோன்றி இருக்கிறது. ஏற்கனவே 45 ஆண்டுகளாக ஒரு அவதாரம் இந்த தேசத்தை பிடித்த பிணி பேசிக்கொண்டிருந்தது. தற்போது 2 ஆண்டு அவதாரமும் விமர்சனங்களை கூறி வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனை பேர் காலை உணவை அருந்துகிறாரக்ள்? எத்தனை வீட்டில் காலை அடுப்பு பற்றவைக்கப்படுகிறது? இதுவெல்லாம் இந்த 2 வயது அரசியல்வாதிக்கும், 45 வயது அரசியல்வாதிக்கும் தெரியுமா?

எங்கள் முதலமைச்சர் 58 ஆண்டுகள் மக்கள் பணியில் இருக்கிறார். எங்கள் கட்சி தலைவரை விமர்சிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? பசி பட்டினி வறுமை பற்றி உங்களுக்கு தெரியுமா? எங்கள் முதலமைச்சர் இது எல்லாம் தெரிந்து தான் ஆட்சி செய்கிறார். கம்பீரமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ” என செல்வப்பெருந்தகை பேசினார்.

ஜவாஹிருல்லா (ம.ம.க) :

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், “பாசிசமா, பாயாசமா என்று ஒருவர் சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகிறார். இது மிகவும் ஆபத்தானது. இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் அது தமிழ்நாட்டுக்கு பேராபத்து” என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்