சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை அழகேசன் என்ற இளைஞர் கடந்த பல ஆண்டுகளாகவே ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியும் அவரிடம் பேசிப் பழகியதால் அதை தவறாகப் புரிந்து கொண்ட அழகேசன், தம்மை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று பிற்பகலில் கல்லூரி முடிந்து வெளியே வந்த அஸ்வினியை மறித்து தம்மை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அஸ்வினி சம்மதிக்காத நிலையில் அவரை அழகேசன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கி காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
அஸ்வினிக்கு இதற்கு முன்பே பலமுறை அழகேசன் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடைசியாக கடந்த மாதம் அஸ்வினியின் வீட்டுக்குச் சென்ற அழகேசன் அவரை தமக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது தாயாரிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது அஸ்வினியின் கழுத்தில் அழகேசன் கட்டாயமாக தாலி கட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அஸ்வினி குடும்பத்தினர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதனடிப்படையில் அழகேசனை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலையில், பரிதாபம் காரணமாக அவரை கைது செய்ய வேண்டாம் என்று அஸ்வினி குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் அழகேசன் கைது செய்யப்படவில்லை. அப்போது அவர்கள் காட்டிய பரிதாபம் தான் இப்போது அஸ்வினியின் உயிரைப் பறித்திருக்கிறது.
அழகேசனின் தொல்லை காரணமாக அஸ்வினியை சென்னையில் வேறு பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கவைத்து அங்கிருந்து கல்லூரிக்குச் சென்று வர வைத்துள்ளனர். ஆனால், அப்போதும் அடங்காத அழகேசன் கல்லூரிக்குச் சென்று மாணவியை கொலை செய்திருக்கிறார். ‘எனக்குக் கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என வெறித்தனமாக கத்திக் கொண்டே அஸ்வினியின் கழுத்தை அறுத்து அழகேசன் கொலை செய்துள்ளார்.
பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் காதல் பிறப்பதை குறை கூற முடியாது. ஆனால், ‘பெண்கள் எனப்படுபவர்கள் காதலிக்கப்படுவதற்காக மட்டுமே பிறந்தவர்கள். அவர்களுக்கென எந்த உணர்வும், விருப்பமும் இருக்கக் கூடாது. காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மீறி நம்மைக் காதலிக்க மறுப்பவர்கள் வேறு யாருடனும் மட்டுமின்றி, இந்த உலகத்திலேயே வாழத் தகுதியற்றவர்கள்’ என்று நினைக்கும் சாத்தான் குணம் பல இளைஞர்களின் மனதில் ஊறியிருப்பதும், அந்தத் தீய குணம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் ஊக்குவிக்கப்படுவதும் தான் மாணவிகள் உள்ளிட்ட பெண்களின் பாதுகாப்புக்கு சவாலாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ.பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா, கோவை தன்யா என இருபத்தி ஐந்துக்கும் அதிகமான இளம் பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.
இத்தகைய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதை காதில் வாங்கிக் கொள்ள தமிழக அரசு மறுக்கிறது.
பாமக மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வதெல்லாம் புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்; பெண்களைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது தான். பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2013-ல் தமிழக அரசு அறிவித்த 13 அம்ச திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
பெண்களைப் பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்கத் தொடங்கினாலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விடும். குண்டர் தடுப்புச் சட்டம் என்பது மிக மோசமான ஆயுதம் என்றாலும் கூட அடங்க மறுக்கும் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் மீது அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஆட்சியாளர்களின் நோக்கமாக தமிழ்நாட்டில் ஒருதலைக் காதலால் இன்னொரு பெண் படுகொலை செய்யப்படக்கூடாது என்பது தான் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.