சென்னை:கல்லூரி மாணவி அஸ்வினி கொலையில் வீட்டிற்கே சென்று தாலி கட்ட முயன்ற இளைஞர்?திடுக் தகவல்…..

Default Image

போலீஸ் விசாரணையில், சென்னையில் குத்திக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி கொலை வழக்கில் கொலையாளி அழகேசனால் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும், வீட்டுக்கே சென்று கட்டாயத் தாலி கட்ட முயன்றதும் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வந்த மாணவி அஸ்வினி தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர். இந்தக் கொலையை செய்த இளைஞர் பொதுமக்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கொலை நடந்தது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவி அஸ்வினி மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் ஆவார். அதே பகுதியில் தான் கொலை செய்த இளைஞர் அழகேசனும் வசித்து வந்துள்ளார். சென்னை மாநகராட்சி ஊழியரான அவர் மலேரியா பிரிவில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் ஒரே பகுதி என்பதால் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர் அது காதலாகவும் மாறியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அஸ்வினியை கல்லூரிக்கு அழகேசனே அழைத்து வந்து விட்டுச்செல்வாராம். நாளடைவில் அழகேசனின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அஸ்வினி விலகி விட்டாராம்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த அழகேசன் அஸ்வினியை சந்தித்து பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் அஸ்வினியின் மனம் இளகவில்லை. இதனால் அஸ்வினி தனது கையை விட்டு விலகி போய்விடக்கூடாது என்று, தாலியுடன் ஒரு நாள் அவர் வீட்டுக்கே சென்று கட்டாயத் தாலி கட்டியுள்ளார் அழகேசன்.

இதுபற்றி அஸ்வினியின் பெற்றோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் அழகேசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அழகேசன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் அழகேசனின் தொல்லை பொறுக்க முடியாமல் அஸ்வினியை ஜாபர்கான் பேட்டையில் உறவினர் இல்லத்தில் தங்கி அங்கிருந்து கல்லூரிக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அழகேசன் தொல்லை காரணமாக கடந்த ஒருவாரமாக அஸ்வினி கல்லூரிக்கு வரவில்லை. நேற்று முதல் மீண்டும் கல்லூரிக்கு வந்த நிலையில் தனக்கு கிடைக்காத அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு கத்தியுடன் அந்தப் பகுதியில் வந்து காத்திருந்தார் அழகேசன். அஸ்வினி வந்தவுடன் அவரை வழிமறித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு அந்த எண்ணமில்லை தான் படிக்க வேண்டும் என்று கூறிய அஸ்வினி தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அழகேசன் என்னை ஒதுக்கும் நீ வாழவே கூடாது என்று கூறி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

படிக்கும் வயதில் ஏற்பட்ட தவறான இனக்கவர்ச்சியை காதல் என்று புரிந்துகொண்டதும், பின்னர் நடைமுறையில் தான் தேர்வு செய்த நபர் சரியான ஆள் இல்லை என தெரிந்து தனது படிப்பைத் தொடர மாணவி நினைத்தபோது அவரது வாழ்க்கை முடிந்து போனது.

தற்போது மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் கொலை குறித்து எழும்பூர் வட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்