நேற்று சென்னை கே.கே.நகரில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது தந்தை மோகன் இறந்து விட்டதால் தாயார் சங்கரியின் பராமரிப்பில் இருந்தார். கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில், அஸ்வினி பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி முடிந்ததும் வெளியே வந்த அவர், கல்லூரிக்கு எதிரே தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன், தான் வைத்திருந்த கத்தியால் திடீரென மாணவி அஸ்வினியின் கழுத்தை அறுத்தான். இதில் படுகாயமடைந்த அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மாணவியைக் கொலை செய்த இளைஞரை அப்பகுதி பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், அஸ்வினியை கொலை செய்தது ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த அழகேசன் என்பதும், காதல் விவகாரத்தால் கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அஸ்வினியை கொன்ற பின் தானும், தற்கொலை செய்யும் நோக்குடன் அழகேசனும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிச் சென்றதாகவும், பொதுமக்கள் தாக்கியதால் தற்கொலைக்கு செய்ய முடியவில்லை என்பதும் தெரியவந்தது. கொலை நடந்த இடத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில் ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த அஸ்வினியும், அழகேசனும் 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அழகேசனின் காதலை அஸ்வினி மறுத்ததாகவும், ஆனாலும் அழகேசன் தொடர்ந்து தொந்தரவு செய்தததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 16ம் தேதி அஸ்வினி புகார் அளித்தார். இதன் பேரில் இருதரப்பினரையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அழகேசன் அஸ்வினியை இனி பின் தொடருவதில்லை என்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கிவிடுவதாகவும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அழகேசனை எச்சரித்து அனுப்பினர். அதன்பின்னரும் அஸ்வினியின் வீட்டுக்குச் சென்ற அழகேசன், அவருக்கு கட்டாயத் தாலி கட்ட முயற்சித்துள்ளார்.
இந்த பிரச்சனையைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்த அஸ்வினி, கடந்த ஒருவாரமாக ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது பெரியப்பா சம்பத்தின் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.அஸ்வினியை இருசக்கரவாகனத்தில் தினமும் சம்பத் கல்லூரிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். நேற்று மாலையில் சம்பத் வருவதற்கு தாமதமானதால் அஸ்வினி தோழிகளுடன் வீட்டுக்கு புறப்பட்டதாகவும் அந்த நேரத்தில் கொலை நடந்திருப்பதாகவும் உறவினர்கள் கூறினர்.
கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. முன்னதாக அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
2016ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவாதி கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மையில் ஆதம்பாக்கத்தில் இந்துஜா என்ற பெண்ணும் காதலை ஏற்க மறுத்ததால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அஸ்வினியும் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வினி கொலை விவகாரத்தில் பெற்றோரிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டிய காவல்துறையினர், பதின் பருவத்தினர் செல்போன்கள் பயன்படுத்துவதை முறையாக கண்காணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…