உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி – இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம்..!
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பணி நியமனத்தை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என அரசு அறிவிப்பு.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, இனி அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்பணி நியமனத்தை மேற்கொள்ளும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய காலத்தேவை, தற்போது ஏற்பட்டுள்ள சமூக ஊடகத்தின் வீச்சு, நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப, மக்கள் தொடர்பு மற்றும் களவிளம்பரங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) நேரடி நியமனத்திற்கான அடிப்படைத் தகுதிகளை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில், கல்வித் தகுதியினை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்து, நேரடி நியமன முறையில் நியமனம் செய்யப்படும் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அகப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்யலாம் என கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
மேலும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு/ பணிமாறுதல் இடையே 1:1 என்ற விகிதாச்சாரத்தில் நிரப்பப்பட வேண்டும். (50% நேரடி நியமனம் 50% பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.