ஜன.13ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அப்பாவு அறிவிப்பு.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில், ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றசாட்டினார். குறிப்பாக, திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துவிட்டார் என கூறப்படுகிறது.
இதன்பின், முதலமைச்சர் உரையின்போது, பேரவையில் இருந்து ஆளுநர் பாதியில் வெளிநடப்பு செய்தார். இந்த சமயத்தில், தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் கேஎன் நேரு பங்கேற்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். எம்எல்ஏ திருமகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நாளை அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.