“சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஒருவாரம் முன்கூட்டியே முடித்து வைக்கப்படுகிறது” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று முன்கூட்டியே முடித்து வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து,இரண்டு நாட்களாக மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் காலமானதை அடுத்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,சட்டப் பேரவை முன்கூட்டியே முடிக்கப்படும் என்று தகவல் வெளியானது.
இதனையடுத்து,தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாட்களை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில்,தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று முன்கூட்டியே முடித்து வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டத்தொடர் நடைப்பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவாரம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்படும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.