சட்டமன்ற தேர்தல்: அடுத்தக்கட்ட திட்டம் குறித்து அறிவிக்க உள்ளார் மு.க.ஸ்டாலின்.!

சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் பரப்புரை அனல் பறக்க நடைபெற்று வருகிறது. அதன்படி, அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மக்களை சந்தித்து அதிமுக அரசின் குறைகளையும், ஊழல்களையும் மக்கள் மத்தியில் முன்வைத்தார்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்தகட்ட முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். இதில் அடுத்தக்கட்ட திட்டம் குறித்து அறிவிக்க உள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் 30 நாள் பிரச்சாரத்தை ஜனவரி 29இல் திருவண்ணாமலையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.