சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு நேரம் ஒரு மணிநேரம் அதிகரிப்பு – தலைமை தேர்தல் அதிகாரி
வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியே தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன், சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தேர்தல் குறித்து ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு மையங்கள் 68,000 லிருந்து 93,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பான தகவல்கள் 24 மணிநேரத்தில் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் சிறப்பு பார்வையாளர்களாக இரண்டு பேர் நியமிக்கபடுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை டெல்லி சென்ற பிறகு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.