மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்… சட்டசபை ஒத்திவைப்பு!
இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, நாளை காலை 9.30 மணிக்கு மீண்டும் அவைக் கூடும் எனச் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, நாளை (ஜன.8)ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் நடைபெறும்.
வருகின்ற 11-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலைமைச்சர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றுகிறார். முன்னதாக, அதிமுக உறுப்பினர்கள் இன்றும் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டிற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறியது அரசியல் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.