உசிலம்பட்டியில் பரபரப்பு.! அதிமுக முன்னாள் அமைச்சரை தாக்க முற்பட்ட அமமுகவினர்.? போலீஸ் வழக்குப்பதிவு.!
உசிலம்பட்டியில் அதிமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதுரை : உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிகழ்வு முடிந்து திருமங்கலம் நோக்கி திரும்பியுள்ளார். உடன் அதிமுக கட்சி பிரமுகர்களும் வந்துள்ளனர்.
அப்போது, மங்கல்ரேவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரை வழிமறித்துள்ளனர். அவர்கள், அமமுக கட்சியினர் என்பதும், அமமுக தலைவர் டி.டி.வி.தினகரனை ஆர்.பி.உதயகுமார் தவறாக பேசியதால் அவரது காரை வழிமறித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் அமமுகவினர், அதிமுக நிர்வாகிகள் காரை தாக்கியதாகவும், அங்கிருந்த அதிமுகவினர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி தினேஷ் குமார் படுகாயமடைந்துள்ளார். உசிலம்பட்டியை சேர்ந்த அபினேஷ், விஷ்ணு ஆகியோரும் காயமுற்று உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது மேல் சிகிச்சைக்காக தினேஷ் குமார், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர் காரை வழிமறித்து அவர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் குமார் அளித்த புகாரின் பெயரில் சேடப்பட்டி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.