“ஒரே மேடையில் தவெக தலைவர் விஜயுடன் நான்.?” திருமா உடைத்த ரகசியம்.!
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பதாக கூறப்படுவதால் நாங்கள் கலந்து பேசி நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி முடிவு செய்வோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவை தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக கட்சித் தலைவர் விஜய் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இருவருமே கலந்து கொள்வர் எனக் கூறப்பட்டது.
தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருமாவளவன், விஜய் ஒரே மேடையில் சந்திப்பு என்பது பேசுபொருளானது. இதற்கு இருதரப்பும் மறுப்போ, விளக்கமோ அளிக்காத நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இந்நிகழ்வு குறித்த விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில், ” முதலில் இந்த நிகழ்வு ஏப்ரல் 14ஆம் தேதியான அம்பேத்கர் பிறந்தநாளில் நடைபெறும் என ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்வது என்பது ஓராண்டுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட ஒன்று. இந்நிகழ்வை விகடன் பதிப்பகமும், ஆதவ் அர்ஜுனா (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.
முதலில் ஏப்ரல் 14-ல் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர் தான் புத்தகத்தை வெளியிட இருந்தது. மேலும் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் மூத்த பத்திரிகையாளர், அம்பேத்கர் உறவினர் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருந்தனர்.
இந்த புத்தகமானது 40க்கும் மேற்பட்டோர் அம்பேத்கரை பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். நானும் இதில் அம்பேத்கர் பற்றி கட்டுரை எழுதியுள்ளேன். தற்போது, டிசம்பர் 6ஆம் தேதிக்கு இந்த நிகழ்வு மாற்றப்பட்டுள்ளது. விஜய் வருவது தவெக மாநாட்டிற்கு முன்னர் முடிவு செய்யப்பட்ட ஒன்று, அப்போது ரஜினிகாந்த் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், தவெக மாநாட்டிற்கு பிறகு ஏற்பட்ட தமிழக அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.” என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.