மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13,247 பேர் பயனடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை!
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13,247 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை தற்போது தமிழக அரசு புதிதாக தொடங்கியுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் துவங்கி வைத்தார். முதல்கட்டமாக 20 லட்சம் பேரை தேடி செல்லக்கூடிய இந்த மருத்துவம், தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் நேற்று வரை 13,247 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,022 பேரும், கோயம்புத்தூரில் 969 பேரும் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 753 பேர் பயன்டைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த திட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.