உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்த களத்திலும் என்னால் வென்று காட்ட முடியும் – ஐந்தாண்டு நிறைவையொட்டி முதல்வர் கடிதம்!

Tamilnadu CM MK Stalin

திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இலட்சியப் பயணம் தொடரும், வெற்றிகள் நிச்சயம் குவியும். தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள முதலமைச்சர் என்ற பொறுப்பின் அடிப்படையிலும், திமுக தலைவர் என்ற பொறுப்பினை சுமந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, மக்கள் காட்டிய அன்பையும், கழகத்தினர் அளித்த வரவேற்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறேன்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை 2018-ஆம் ஆண்டு இயற்கை நம்மிடமிருந்து பிரித்தபோது, இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை உங்கள் அனைவரின் ஆதரவுடன் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என் மீது சுமத்தினார். உடன்பிறப்புகளான நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் நானும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அப்போது, கழகம் எதிர்க்கட்சியாக இருந்தது. நாடாளுமன்ற மக்களவையில் நமக்கு ஒரு இடம் கூட இல்லை. தலைவரை இழந்த கழகத்தில் பிளவு வராதா என்று எதிர்பார்த்த எதிரிகள் உண்டு.

கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம் எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும் என்பதை ஒவ்வொரு உடன்பிறப்பும் மெய்ப்பித்துக் காட்டியதுடன், ’வெற்றிடத்திற்கு வேலை இல்லை, இது வெற்றிக்கான இயக்கம்’ என்பதை நம் உழைப்பால் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.  2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணியை உருவாக்கினோம். அது வெறும் தேர்தல் நேரக் கூட்டணி அல்ல. கொள்கை உணர்வுமிக்க கூட்டணி.

நாடாளுமன்றத் தேர்தலில் அந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் பெற்ற மகத்தான வெற்றி என்பது இந்திய அளவிலான அரசியல் இயக்கங்களுக்கு ஒரு ஃபார்முலாவாக ஆனது. மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற தகுதியை திமுக பெற்றது.  அதன்பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில், எதிர்க்கட்சியின் வெற்றிப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வெற்றிகள் நமக்கு ஊக்கத்தை அளித்தன. ஆனாலும், 6வது முறையாகத் தலைவர் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு அமையாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் என் நெஞ்சில் நீடித்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கொள்கைக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்குத் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலத்தை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள். இது கலைஞர் அவர்களின் ஆட்சியின் தொடர்ச்சிதான் என்பதை உறுதி செய்தேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் உண்மையான ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்கின்ற இயக்கம். மக்கள் நலனுக்கு ஆதரவானவர்கள் யார், மக்களின் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு செயல்படுகின்ற இயக்கம். அந்த வகையில்தான் 2019-ஆம் ஆண்டு அமைந்த கொள்கைக் கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் உறுதியாகத் தொடர்வதுடன், ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றியும் தொடர்ந்து வருகிறது.

இந்த வளர்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் தி.மு.கழகம் தொடர்ந்து ஆட்சி செய்கின்ற வாய்ப்பு அமைய வேண்டும். ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால்தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும். முழுமையான வெளிச்சம் பரவும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பா.ஜ.க அரசு அலறக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது. அந்த இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும். இந்தியாவின் வெற்றி முழுமையடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி.. வெற்றி.. மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும்.

ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றியாக விளையும். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட தி.மு.க எனும் பேரியக்கம், நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் பங்கேற்றிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO