“பாமக சாதனைக்கு வயது 20…நான் இருக்கும் வரை;வென்று கொண்டே இருப்பேன்” – நிறுவனர் ராமதாஸ்!
தமிழகம்:நான் இருக்கும் வரை அனைத்து சமுதாயங்களுக்குமான உரிமைப் போராட்டத்தை நான் முன்னெடுத்துக் கொண்டே இருப்பேன்,அதில் நான் வென்று கொண்டே இருப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் தொகுதியில் இருளர்களுக்கான வாழ்வுரிமை வழங்கி நாம் படைத்த சாதனைக்கு தற்போது 20-ஆவது வயது ஆகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:
“உதவி செய்து விளம்பரம் தேடி லாபம் பார்த்தால் அது வணிகம்…
வாழ்வுரிமை வழங்கி அதை ரசித்து மகிழ்ந்தால் அது உறவு
பழங்குடியின மக்களுடனான நமது தொடர்பு என்பது உறவு தான். அதனால் தான் அந்த உறவுகளால் நாம் கொண்டாடப்படுகிறோம்.
அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடியில் இருளர் இன மக்கள் வாழும் பகுதிக்குப் பெயர் ‘‘டாக்டர் அய்யா நகர்’’. எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்தப் பெயரை சூட்டி மகிழ்ந்தவர்கள் இருளர் இன மக்கள். அந்த நகர் உருவான வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்,ஆண்டிமடம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக ஜெ.குரு போட்டியிட்டார். அவரை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக சென்ற போது அங்கு வாழும் இருளர் இன மக்கள் எங்களிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். ‘‘அய்யா…. எங்களுக்கு வாழவும் வகையில்லை…. சாகவும் வகையில்லை. அதற்கான வசதிகளை செய்து தாருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டனர். அதாவது தாங்கள் வீடு கட்டி வாழ்வதற்கும், மயானம் அமைப்பதற்கும் பட்டா நிலம் பெற்றுத் தர வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை ஆகும்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அந்த மக்களிடம் உறுதி அளித்தேன். அதுமட்டுமின்றி, அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஜெ.குருவுக்கும் ஆணையிட்டேன்.
தேர்தல்கள் முடிவடைந்து 2001 மே 13-ஆம் தேதி முடிவுகள் வெளியாயின. ஆண்டிமடம் தொகுதியில் ஜெ.குரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அன்றே இருளர்களின் முதல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆண்டிமடம் திராவிட நல்லூரில் 20 சென்ட் பரப்பளவுள்ள நிலத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்துத் தரப் பட்டது. அதே ஊரைச் சேர்ந்த பச்சமுத்து படையாட்சி என்பவரிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சியே இந்த நிலத்தைப் பெற்றுத் தந்தது. இதில் அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. பா.ம.க.வே அதன் சொந்த ஏற்பாட்டில் இதை செய்து கொடுத்ததுடன், அதற்காக அரசின் ஓப்புதலையும் பெற்றுத் தந்தது.
அடுத்து செந்துறை ஒன்றியத்தில் உள்ள முதுகுளம் என்ற இடத்தில் இருளர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்காக நிலம் அடையாளம் காணப்பட்டது. மொத்தம் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலம் அதற்கு பொருத்தமாக இருக்கும் என்று தீர்மானித்தோம். ஆனால், அந்த இடத்தை ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். அந்த இடத்தை காலி செய்ய அவர் மறுத்தார். ஆனாலும், எனது ஆணையின்படி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் அந்த இடம் மீட்கப்பட்டது. 2003&ஆம் ஆண்டில் அந்த இடம் மொத்தம் 30 இருளர் குடும்பங்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டது.
இருளர்களுக்கு வாழ்வுரிமை அளிக்கும் பணிகள் அத்துடன் முடிவடைந்து விடவில்லை. பாப்பாக்குடி என்ற இடத்தில் வசிக்க இடம் இல்லாமல் தவித்த இருளர் இன மக்களுக்காக இடம் தேடும் படலம் தொடங்கியது. எனது ஆணைப்படி மாவீரன் ஜெ.குரு தான் அந்தப் பணிகளைச் செய்தார். பாப்பாக்குடியில் இளவரசு என்ற வன்னியரிடமிருந்து ஒரு ஏக்கர் நிலமும், முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த இன்னொருவரிடமிருந்து ஒன்றரை ஏக்கர் நிலமும் பெறப்பட்டு 60 வீட்டு மனைகள் உருவாக்கப் பட்டன. இந்தப் பணிகளை நிறைவு செய்ய 2007-ஆம் ஆண்டு ஆகி விட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த பணிகளை பாராட்டிய மாவட்ட நிர்வாகம் அந்த இடங்களுக்கான பட்டாவை நானே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. வழக்கமாக வருவாய்த்துறை அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் தான் பட்டாக்களை வழங்குவார்கள். ஆனால், இருளர்களுக்கு நிலம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாட்டாளி மக்கள் கட்சியே செய்ததால், பட்டாவையும் நானே வழங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன்படி நடத்தப்பட்ட விழாவில் இருளர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நான் வழங்கினேன். இந்த நிகழ்ச்சியில் குருவும் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து அங்கு இருளர் சமுதாய மக்கள் வீடு கட்டி குடியேறினார்கள். அதுமட்டுமின்றி, அந்த இடத்திற்கு டாக்டர் அய்யா நகர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இப்போதும் பாப்பாக்குடியில் அந்த நகர் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, அந்தக் குடியிருப்பில் மேலும் 20 இருளர் குடும்பங்களுக்கு வழங்கும் அளவுக்கு வீட்டுமனைகள் உள்ளன.
ஆண்டிமடம் தொகுதியில் இருளர்களுக்கான வாழ்வுரிமை வழங்கி நாம் படைத்த சாதனைக்கு இப்போது 20-ஆவது வயது ஆகிறது.இருளர்கள் மட்டுமல்ல,அனைத்துப் பழங்குடியின மக்களுக்காகவும் நான் போராடிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் இருக்கும் வரை அனைத்து சமுதாயங்களுக்குமான உரிமைப் போராட்டத்தை நான் முன்னெடுப்பேன்…. முன்னெடுத்துக் கொண்டே இருப்பேன்…. அதில் நான் வென்று கொண்டே இருப்பேன்”,என்று தெரிவித்துள்ளார்.