நான் உயிருடன் இருக்கும்வரை இரட்டை இலைக்கு ஆபத்து இல்லை – சசிகலா
பாஜகவால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என் நிழலை கூட பாஜகவால் நெருங்க முடியாது என சசிகலா பேட்டி.
மன்னார்குடியில் சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தொண்டர்களின் முடிவு என்னவோ அதுதான் என்னுடைய முடிவாக இருக்கும். அவர்களின் மனக்குமுறலை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய விடமாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலைக்கு ஆபத்து வராது. பாஜகவால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என் நிழலை கூட பாஜகவால் நெருங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவருமே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக பிளவுப்பட்டு போனதற்கு பாஜகதான் காரணமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா நம்மை அவர்கள் கட்டுப்படுத்த? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளை இணைக்க நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தேர்தலின்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன் என்றார். ஆனால், இன்னும் அந்த பெட்டி திறக்கப்படவே இல்லை. ஒரு வேளை சாவி தொலைந்து போய்விட்டது போல என தெரிவித்துள்ளார்.