ஆளுநருக்கு தமிழக மக்களின் நலனை விட ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களின் நலன் முக்கியம் போல – ஜோதிமணி எம்.பி
தமிழகத்தின் ஆளுநருக்கு தமிழக மக்களின் நலனை விட ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களின் நலன் முக்கியம் போல என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்த நிலையில், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்று முன்தினம் காலாவதியானது.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தின் ஆளுநருக்கு தமிழக மக்களின் நலனை விட ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களின் நலன் முக்கியம் போல. அதனால் தான் தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் கையெழுத்திடாமல் காலவதியாக விட்டிருக்கிறார். அவசர சட்டத்தில் உடனே கையெழுத்திட்ட ஆளுநர் இப்பொழுது மறுப்பது ஏன்?
இரண்டுக்கும் இடையில் என்ன நடந்தது? யாருடைய அழுத்தத்தின் அடிப்படையில் ஆளுநர் 32 தற்கொலைகள் நிகழ்ந்த பின்னும்,தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்? இதனால் தான் பாஜக தமிழர்களுக்கும்,தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என்று சொல்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
இரண்டுக்கும் இடையில் என்ன நடந்தது? யாருடைய அழுத்தத்தின் அடிப்படையில் ஆளுநர் 32 தற்கொலைகள் நிகழ்ந்த பின்னும்,தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்? இதனால் தான் பாஜக தமிழர்களுக்கும்,தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என்று சொல்கிறோம்.
— Jothimani (@jothims) November 28, 2022