கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி – உயர்நீதிமன்ற கிளை
மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து.
திருச்செந்தூர் கோயில் ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி.
விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோயில்களில் விஐபி தரிசனம் முறையால் சாதாரண பக்தர்கள் சீரமத்துக்குள்ளாகிறார்கள்.
திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூர் கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்களை தூத்துக்குடி எஸ்பி நியமிக்கவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
கோயிலுக்கு வரும் பக்தர்களை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டார் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் காவல், வருவாய், அறநிலையத்துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்கக்கூடாது, பக்தர்கள் போல நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், பக்தர்களை தகாத வார்த்தைகளால் பேசும் கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயிலின் பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை 3 வாரங்களில் நடைமுறைப்படுத்தவும் ஆணையிட்டுள்ளனர்.