பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரம் – அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
பெரியார் சிலையை அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர் இது குறித்து அளித்த புகாரின் பேரில் 153, 153 ஏ(1)(பி), 504 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே பெரியார் சிலை மீது காவி் சாயம் வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதன் பின் காவல் துறையினர் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அருணை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். எனவே பெரியார் சிலையை அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் காவல்துறை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.