ஆருத்ரா மோசடி! நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்.. குற்றப்பத்திரிகையில் தகவல்!
ஆருத்ரா கோல்டு டிரேடிங் விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் சுமார் ரூ.15 கோடி வரை பணம் பெற்றிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ரூ.5 கோடி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ.15 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.15 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 500 முகவர்கள் மூலம் ரூ.800 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடுகளை பெற்று ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடிகர் ஆர்கே சுரேஸுக்கு சம்மன் அனுப்பட்டு, அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
மேலும் இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. கடந்த 20ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட குற்றபத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.