ஆருத்ரா மோசடி வழக்கு – நாளை 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

aarudhra gold

ஆருத்ரா மோசடி தொடர்பான வழக்கில் ஆவணங்கள், ஆதாரங்கள் நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்.

ரூ.2,438 கோடி ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி தொடர்பான வழக்கில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆருத்ரா மோசடி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடுகளை பெற்று ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அடிப்படையில் இதுவரை 61 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

22 கார்கள், வங்கி கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி வைப்புத்தொகை மற்றும் ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆருத்ரா மோசடி தொடர்பான வழக்கில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்